ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம், செட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தீபா (41), சம்பவத்தன்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்தன.
வீட்டில் உள்ள அறையில் பீரோ கதவு திறந்திருந்தது. பீரோவை சோதனை செய்தபோது பீரோவிலிருந்த செயின், கம்மல், தோடு என 9 பவுன் தங்க நகை திருடுபோயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களைச் சேகரித்துச் சென்றனர்.
போலீசார் விசாரணையில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.