சென்னிமலை முருகன் கோவிலின் உப கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்து வந்த ரூ. 32 கோடி மதிப்புள்ள 32 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவிலின் உப கோவில்களான முகாசிபிடாரியூரில் உள்ள திருமுகமலர்ந்த நாதர் மற்றும் திருக்கை நாராயண பெருமாள் கோவில்களுக்கு சொந்தமாக 32 ஏக்கர் புன்செய் நிலங்கள் அட்டவணை பிடாரியூர் வருவாய் கிராமத்தில் 6 இடங்களில் உள்ளது. இந்த நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 32 கோடி ஆகும். இந்த நிலங்கள் 12 தனி நபர்களால் சுமார் 42 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அவர்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்த ஆக்கிரமிப்புதாரர்கள் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று இறுதியாக அறநிலையத்துறையின் ஈரோடு இணைய ஆணையர் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் இந்த நிலங்கள் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமானவை என்றும், அதனால் ஆக்கிரமிப்புதாரர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கடந்த 18-12-2024 மற்றும் 9-1-2025 ஆகிய தேதிகளில் இணை ஆணையர் நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நகல்கள் ஆக்கிரமிப்புதாரர்கள் அனைவருக்கும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்டிருந்தது.