ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளை வரவேற்கும் விதமாக வண்ண பலூன்களால் ஆன வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன. பள்ளிக்கு வந்த ஒவ்வொரு மாணவிக்கும் தலைமை ஆசிரியர் ரோஜா பூ மற்றும் கற்கண்டு கொடுத்து வரவேற்றார். இதைப்போல் எஸ்கேசி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை மேளம் தாளம் முழங்க தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர். மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் புதிதாக சிறந்த 30 மாணவ-மாணவிகளுக்கு வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன.
இதேபோல் பெரியார் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் விதமாக அவர்களை மேளம் தாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து வரவேற்பு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.வி. பிரகாஷ், வி.சி. சந்திரகுமார் எம்.எல்.ஏ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் புதிய மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நெல்லில் புதிதாக சேர்ந்த மாணவர்களை அ எழுத வைத்து வரவேற்றனர். இதேபோல் வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் வாழைத் தோரணங்கள் கட்டப்பட்டு மாணவர்களை வரவேற்றனர்.