ஓதியூர் ஏரியில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

56பார்த்தது
ஓதியூர் ஏரியில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில், 275 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. சுற்றுப்புறங்களிலிருந்து 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், ஓதியூர் ஏரிக்கு வந்து சேர்ந்து, பின் பகிங்ஹாம் கால்வாய் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் பருவமழை முடிந்த பின், டிசம்பர் மாதத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் இலங்கை, ஆஸ்திரேலியா, மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து, இந்த ஏரிக்கு பறவைகள் வருகின்றன. இந்த ஏரியில் உள்ள மீன் குஞ்சுகள், புழு, நத்தை, சிப்பிகளை உணவாக விரும்பி உண்ணுகின்றன. பின், இனப்பெருக்கம் செய்து ஏப்ரல், மே மாதங்களில் சொந்த நாடுகளுக்கு திரும்பச் செல்வது வழக்கம். கடந்த ஆண்டு, மதுராந்தகம் வனச்சரக அலுவலகம் வாயிலாக பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் நீர்காகம், ஊசிவால் வாத்து, அரிவாள் மூக்கன், நீர்த்தாழி, பிளமிங்கோ, கரண்டிமூக்கு கொக்கு, நீர்ப்பறவை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட வகையான, 15,000க்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்தது தெரிந்தது. இந்நிலையில் பருவமழை துவங்கி ஓதியூர் ஏரி நிரம்பியுள்ள நிலையில், பிளமிங்கோ மற்றும் சிறவி பறவைகளின் வருகை துவங்கியுள்ளது. தற்போது, 1,000க்கும் மேற்பட்ட சிறவி மற்றும் நூறுக்கும் மேற்பட்ட பிளமிங்கோ பறவைகள் வந்துள்ளன.