காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சியில், 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. சோமங்கலம், அமரம்பேடு, கொளத்தூர், மேட்டுக் கொளத்தூர், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதியினர், கொளத்தூர் பிரதான சாலை வழியாக, ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
சமீபத்தில் பெய்த மழையில், இந்த சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியது. இதையடுத்து, கடந்த மாதம் சேதமடைந்த இடங்களில், ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. இந்த நிலையில், சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிக் கற்கள் சிதறியுள்ளதால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், ஜல்லியில் இடறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழலில் சென்று வருகின்றனர்.
மேலும், பெண்கள், வயதானோர் செல்லும்போது, தடுமாற்றம் அடைந்து பயணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, கொளத்தூர் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.