பா. ம. க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தில் 1998-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.
கடந்த 2013-ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் கடைசியாக நடைபெற்ற சித்திரை பெருவிழாவை அடுத்து அந்த விழா, தொல்லியல் துறை தடை உத்தரவால் கடந்த 12 ஆண்டுகளாக மாமல்லபுரத்தில் நடத்தப்படவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் லட்சக்கணக்கில் பா. ம. க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் கூடும் வகையில் மீண்டும் சித்திரை முழு நிலவு பெருவிழாவை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் சித்திரை முழு நிலவு பெருவிழா மாநாடு நடத்துவதற்காக 50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மாநாட்டுக்கான பிரம்மாண்ட மேடை அமைப்பதற்கான பந்தல்கால் நடும் விழா இன்று இந்து ஆகம முறைப்படி நடக்க உள்ளது, பா. ம. க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பந்தல்கால் நட உள்ளார்.
முன்னதாக திருமண வீடுகளில் நடப்பது போல் பந்தல்காலுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து திருமண வீடுகளில் பந்தல்காலுக்கு செய்யும் நடைமுறைகளை பின்பற்றி பந்தல்கால் நடப்பட உள்ளது.