செங்கல்பட்டு-திருப்போரூர் மாநில நெடுஞ்சாலை, 25 கி.மீ. தூரம் உடையது. சென்னேரி, கொட்டமேடு, பெருந்தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் மக்கள் செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுவர, இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். கார், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலை வழியாக கடந்து செல்கின்றன. இந்த சாலையில் திருப்போரூர் கூட்டுச்சாலை அருகில் சாலையின் இருபுறமும் 1.5 கி.மீ. தூரம் சென்னேரி காப்புக்காடு உள்ளது. இதில் சாலையோரம் உள்ள மரங்களில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் வசிக்கின்றன.
இவை சாலையின் குறுக்கே இருபுறமும் திடீரென செல்வதால் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. புதிதாக இந்த சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு இந்த பகுதியில் குரங்குகள் இருப்பது தெரியாததால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று குரங்குகள் அடிபட்டு வருகின்றன. மேலும், சில வாகன ஓட்டிகள் குரங்குகளுக்கு உணவு பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை தருவதால் குரங்குகள் வாகனங்களின் பின்னே ஓடுகின்றன. அப்போது அவை விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே, குரங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்க, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலையின் இருபுறமும் அறிவிப்புப் பலகை அமைக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.