செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு ஊராட்சி பகுதிகளில் அதிகமான விவசாயிகள் ஆடு, மாடு உள்ளிட்டவற்றை வளர்த்து வருகின்றனர். நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கால்நடைகளை அதிகமாக வளர்த்து வருகின்றனர். சமீப காலமாக, இந்த ஆடு, மாடுகள் தொடர்ந்து காணாமல் போவது தெரிந்தது. இந்நிலையில் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள சீனிவாசபுரம் கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (45), என்பவரின் நான்கு பசுக்கள், பெருமாட்டுநல்லூரைச் சேர்ந்த குணசேகரன் (42), என்பவரது மூன்று பசுக்கள், இரண்டு ஆடுகளையும் காணவில்லை.
இது தொடர்பாக, அவர்கள் நேற்று (டிசம்பர் 21), கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த போது, போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். இந்த தகவல் சுற்றுவட்டார பகுதியில் பரவியதை தொடர்ந்து, மாடுகள் காணாமல் போனது குறித்து புகார் கொடுக்காமல் இருந்தவர்கள் 20க்கும் மேற்பட்டோர், நேற்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.