காஞ்சிபுரத்தில் ராஜ வீதிகள் என அழைக்கப்படும் கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, செங்கழுநீர்வீதி, அன்னை இந்திரா காந்தி சாலை என, நான்கு ராஜ வீதிகளிலும், நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, அதன் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதையை கடைக்காரர்கள் தங்களது கடையை விரிவாக்கம் செய்து ஆக்கிரமித்துள்ளனர். கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால், நடைபாதையில் செல்ல வேண்டிய பாதசாரிகள் மையப்பகுதியில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால், விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள சித்ரகுப்தர் கோவில் அமைந்துள்ள பகுதியில் நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இச்சாலை விசாலமான சாலையாக மாறியது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருந்தது. ஆனால், ஒரு சில நாட்களில் மீண்டும் அன்னை இந்திரா காந்தி சாலையில், சாலையோர மற்றும் நடைபாதை கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.