சென்னை விமான நிலையப் பகுதியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதை அடுத்து லண்டனில் இருந்து 317 பயணிகளுடன் சென்னை வந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பெங்களூருக்கும், மஸ்கட்டில் இருந்து 252 பயணிகளுடன் சென்னைக்கு வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூருக்கும், ஹைதராபாத்தில் இருந்து 162 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் திருவனந்தபுரத்திற்கும், புனேவில் இருந்து 152 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் திருவனந்தபுரத்திற்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
குவைத்தில் இருந்து 148 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் தொடர்ந்து வானில் வட்டமடித்துக்கொண்டு இருக்கிறது. இதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் டெல்லி, மதுரை, கோவை, தூத்துக்குடி, விஜயவாடா, அந்தமான், லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட 15 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பனிமூட்டம் காரணமாக சுமார் 25க்கும் மேற்பட்ட வருகை புறப்பாடு விமானங்கள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி கொண்டிருக்கின்றனர்.