காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, சாத்தணஞ்சேரி, களியப்பேட்டை, ஒரக்காட்டுப்பேட்டை, அரும்புலியூர், பினாயூர், காவிதண்டலம், திருவானைக்கோவில், கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இப்பகுதிகளில் சாகுபடி செய்யும் கரும்புகளை, விவசாயிகள் அறுவடை செய்த பின், மதுராந்தகம் அடுத்த படாளத்தில் இயங்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு அனுப்புகின்றனர். இங்கு, ஆண்டுதோறும் சர்க்கரைக்கு அரவை செய்யும் மொத்த கரும்புகளில், 40 சதவீதம் சீட்டணஞ்சேரி கரும்பு மண்டல விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
இப்பகுதிகளில், கடந்த ஆண்டுகளில், கரும்பு வெட்ட உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர்களில் ஏராளமான ஆட்கள் இருந்தனர். கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர், தற்போது சென்னை புறநகர் பகுதிகளில், தனியார் தொழிற்சாலைகளுக்கும், கட்டுமான பணிகளுக்கும் சென்று விட்டனர். இந்நிலையில், படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை பணிகள், வரும் 25ல் துவங்க உள்ள நிலையில், கரும்பு வெட்ட ஆட்கள் தட்டுப்பாடால், இப்பகுதி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.