கன்னியாகுமரியை அடுத்த லீபுரத்தில் பாட்டுக்குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையோர பகுதிகளில் செடி கொடிகள் படர்ந்து புதர் மண்டியிருக்கிறது. இந்தநிலையில் நேற்று மாலை அந்த பகுதி வழியாக சிலர் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் பாதி எரிந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் கன்னியாகுமரி துணைபோலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். எரிந்த நிலையில் கிடந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் எப்படி இறந்தார், அவரை யாராவது கொலை செய்து எரித்தார்களா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தடயவியல் நிபுணர்கள் இன்று வாலிபர் எரிந்த நிலையில் கிடந்த இடத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.