கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, தாழக்குடி, செண்பகராமன்புதூர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள், வேன்களில் வந்து ஆடுகளை திருடி செல்லும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்தநிலையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துகுறிச்சியை சேர்ந்த சுடலை (வயது 50) என்பவர் தனக்கு சொந்தமான ஏராளமான ஆடுகளை சில நாட்களாக தாழக்குடி அருகே வீரநாராயண மங்கலம் பகுதியில் உள்ள தோப்பில் மந்தை போட்டு மேய்த்து வருகிறார். சம்பவத்தன்று 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து மந்தையில் இருந்து ஒரு ஆட்டை திருடி சென்றனர். இதுகுறித்து சுடலை ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி ஆட்டை திருடி சென்ற அனந்தபத்மநாத்புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (24) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.