கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள அரசு தாலுகா தலைமை மருத்துவமனையை கலெக்டர் அழகுமீனா நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளை சந்தித்து, அவர்களின் உடல்நலம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் பரிசோதனை விவரங்கள், வழங்கப்படும் உணவுகள் குறித்தும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் கர்ப்பிணிகளையும் நேரில் சந்தித்து சிகிச்சைகள் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள், 24 மணிநேர வெந்நீர் வசதி குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர், மருத்துவமனையில் பிரசவ அறை, பிரசவ வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன், உள்நோயாளிகளுக்கு படுக்கையில் விரிக்கப்பட்டுள்ள விரிப்புகளை தினமும் மாற்ற வேண்டும், வார்டுகளின் தரை மற்றும் சுவர்பகுதியில் கறைகள் இல்லாதவாறு தினமும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள், செவிலியர்களும் கலந்து கொண்டனர்.