கன்னியாகுமரி கடல் பகுதியில் இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் காற்றாலை திட்டத்தை கைவிட வேண்டும், கொல்லம் முதல் மன்னார்வளைக்குடா வரையிலான அணுக்கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கிள்ளியூர் தாலுகாவில் 1,144 ஹெக்டேர் நிலங்களில் உள்ள அணுக்கனிம மணல் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11-ந் தேதி சின்னமுட்டம் கடற்கரையில் மீனவர்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரம் கடற்கரையில் அந்தப் பகுதி மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்களும், பெண்களும் திரண்டுவந்து மீனவர்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் திட்டங்களை நிறுத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மேலும் மீனவர்கள் நாட்டுப் படகுகளில் கருப்புக்கொடியை கட்டியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் சில மீனவர்கள் கருப்புக்கொடி கட்டிய படகுகளுடன் கடலில் வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை கிங்ஸ் லின்ஷாஜு தலைமை தாங்கினார். பங்குப் பேரவை துணைத்தலைவர் அமல்ராஜ் உள்பட ஏராளமானோர் போராட்டக் களத்தில் குதித்தனர்.