கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் விண்வெளி குறித்து அறியும் வகையில் இஸ்ரோ சார்பில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத்தரம் வாய்ந்த விண்வெளி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக சன்செட் பாயிண்ட் பகுதியில் கடற்கரை பூங்கா அமைந்துள்ள நிலத்தை மாவட்ட நிர்வாகம் இஸ்ரோ நிர்வாகத்திற்கு ஒதுக்கியது. இந்த இடத்தை இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று பார்வையிட்டார். முன்னதாக கன்னியாகுமரிக்கு வந்த அவர் பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதுபோல் இஸ்ரோ தலைவர் நாராயணன் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். அவர் தாணுமாலயசாமி சன்னதி, திருவேங்கடவிண்ணவரம் பெருமாள் சன்னதி, இசைத்தூண்கள், 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் சுற்றுப்பிரகாரங்களில் உள்ள சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
அவருடன் இஸ்ரோ அதிகாரிகள் பலரும் உடன் வந்தனர். அவர்களுக்கு கோவில் ஸ்தல வரலாறு குறித்து கோவில் பணியாளர் சுப்பிரமணியம் எடுத்துரைத்தார். முன்னதாக இஸ்ரோ தலைவர் நாராயணனை கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.