திங்கள்நகர் பேரூராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் சுகன்யா என்பவர் நேற்று முன்தினம் மாலை பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டு காலி குடங்களுடன் வந்த அவர் பேரூராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து அவர் 4 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார் மற்றும் அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் எழில் ஆக்னேஸ் ஆகியோர் பேசியும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இரவு முழுவதும் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் அவரும் அவருடைய உறவினருடன் தூங்கினர்.
நேற்று (மார்ச் 29) தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன் மற்றும் உதவி இயக்குநர் ராமலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இருப்பினும் தொடர் போராட்டமே நீடித்து வந்தது. பின்னர் மாலையில் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி பிரின்ஸ் போராட்டகளத்திற்கு வருகை தந்து உயர் அதிகாரிகளிடம் பேசி 15 நாட்களுக்குள் அனைத்து கோரிக்கைகளும் சரிசெய்து தரப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.