மார்த்தாண்டம் அருகே நட்டாலத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் கொள்ளை நடந்தது. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களை குறிவைத்து அடிக்கடி கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்தது.
கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்தந்த பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று ராஜாவூர் பகுதியில் வைத்து பைக்கில் சென்று கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்த அன்பரசு (31) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் வைத்திருந்த பைக்கை சோதனையிட்ட போது அதில் குத்துவிளக்கு, சூலாயுதம், தங்க பொட்டு உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தது.
மேலும் அவரை கைது செய்து மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்திய போது அவர் நட்டாலம் சிவன் கோவில் உட்பட மாவட்டத்தில் 14 மேற்பட்ட கோவில்களில் கைவரிசை காட்டியதாக தெரிய வந்தது. இதை அடுத்து அவரை கைது செய்து நேற்று இரவில் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.