கரூர்: தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..500 பேர் கைது

71பார்த்தது
கரூரில், அதிமுக சார்பில் இன்று (டிசம்பர் 30) ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். ஆயினும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில், தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்த வந்த அதிமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உட்பட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.