கரூர் மாவட்டம், புலியூர், பி. வெள்ளாளப்பட்டி அருகே உள்ள மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சமுத்து மனைவி அன்னம்மாள் (75). இவர் கடந்த ஆறு மாதமாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் அவருக்கு பூரண குணமடையவில்லை. இதனால் விரக்தி மனப்பான்மையில் வாழ்ந்து வந்த அன்னம்மாள், ஜனவரி 23ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், அவரது வீட்டில் டாய்லெட் சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஹார்பிக் என்ற திரவத்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இச்சம்பவம் அறிந்த அன்னம்மாளின் மகள் நல்லம்மாள் (55) என்பவர் தனது தாயாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அன்னம்மாள் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 11:30 மணி அளவில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நல்லம்மாள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட பசுபதிபாளையம் காவல்துறையினர், உயிரிழந்த அன்னம்மாளின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.