கரூர் அருகே ரெட்டிபாளையத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை செயல்படுகிறது. நேற்று பாஜக மேற்கு மாநகர தலைவர் பவானி துரைபாண்டியன் தலைமையில் பாஜகவினர் அங்கு திடீரென வந்தனர். அங்கு செயல்படும் டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்ட முயன்றனர்.
அப்போது, அங்கு பணியில் இருந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் அவர்களை தடுத்தனர். ஆனால், அதையும் மீறி டாஸ்மாக் சுவற்றில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டினர். அடுத்த நிமிடமே அந்த போஸ்டரை டாஸ்மாக் ஊழியர்கள் கிழித்ததால் டாஸ்மாக் ஊழியர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்த கரூர் நகர காவல் நிலைய போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.