தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி நந்தினி, இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கருத்தரித்துள்ளார். அப்போது அருண்குமார் நந்தினியை தர்மபுரி சீனிவாசராவ் தெருவில் உள்ள KS தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை நந்தினிக்கு பிரசவவலி ஏற்பட்டதை அடுத்து அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நந்தினியை KS தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அறுவை சிகிச்சை அரங்கிற்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் நந்தினியை அழைத்துச் சென்றுள்ளனர். பிரசவத்தில் சிக்கல் உள்ளதாக டாக்டர்கள் நந்தினியை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் 2 குழந்தைகளும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நந்தினி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நந்தினி உறவினர்கள் நந்தினியின் இரட்டை குழந்தை சாவுக்கு காரணமான தனியார் மருத்துவமனை டாக்டர் உள்ளிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று பிற்பகல் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தர்மபுரி நகர காவலர்கள் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.