கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மா விளைச்சல் அதிகரித்து உள்ளது. ஆனால் நல்ல விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காததால் மா விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மா விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாமரங்களில் அதிக அளவில் பூக்கள் பூத்திருந்தது அதுபோல மா விளைச்சலும் அதிகரித்துள்ளது. மழையும் தற்போது பெய்து வருவதால் பெங்களூரா, செந்தூரா, காதார், மித்தர், நீலம் உள்ளிட்ட பல்வேறு வகையான மாங்காய் நல்ல தரமாக உள்ளது. இம்மாவட்டத்தில் அறுவடை செய்யும் மாங்காய்களை மாவட்டத்தில் இயங்கும் மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும்.
ஆனால் இந்த ஆண்டு மாங்கூழ் உற்பத்தியாளர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து சிண்டிகேட் அமைத்து கிலோ 5 ரூபாய் முதல் 7 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு அறுவடைக்கு தயாரான மாங்காய்கள் அறுவடை செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஆகையால் பல லட்சம் ரூபாய் செலவு செய்தும் மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.