சோழவந்தான்: குருபெயர்ச்சி விழா பூஜைகள் தொடக்கம்

60பார்த்தது
சோழவந்தான்: குருபெயர்ச்சி விழா பூஜைகள் தொடக்கம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோயில் வைகை கரையோரம் அமைந்துள்ளது. இக்கோயிலின் எதிரே உள்ள தனி சன்னதியில் சுயம்பு குருபகவான் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

 குருபகவான் அருகில் சக்கரத்தாழ்வார் சுயம்பாக எழுந்தருளியுள்ளார். இந்த ஆண்டு குருபெயர்ச்சி நாளை (மே 11) நண்பகல் 1.24 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நேரத்தில் குருபகவான் ரிஷபம் ராசியிலிருந்து, மிதுனம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதன் தொடக்க விழாவாக நேற்று காலை 9.30 மணிக்கு கோயில் பட்டர்கள் ஸ்ரீதர், சடகோபர், ராஜா, யுவா, பாலாஜி ஆகியோர் இணைந்து, குருபகவான் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு மலர்கள் தூவி லட்சார்ச்சனை நடத்தினர். 

இது நாளை (மே 11) காலை 10 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இதையடுத்து முக்கிய நிகழ்வாக காலை 11 மணிக்கு பரிஹார மஹாயாகம் தொடங்கி, புனித நீர் கடங்கள் எடுத்து வரப்பட்டு, குருபெயர்ச்சியடையும் நண்பகல் 1.24 மணிக்கு குருபகவான் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு புனித நீர் ஊற்றி, சிறப்பு திருமஞ்சனம், மஹா ஆரத்தி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் கோயில் தக்கார் மாலதி, ஆய்வாளர் ஜெயலெட்சுமி, செயல் அலுவலர் கார்த்திகை செல்வி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி