மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தெற்கு தெரு, விக்கிரமங்கலம் செல்லும் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீடுகளின் அருகிலேயே மிகவும் தாழ்வாக மின்வயர்கள் செல்கிறது.
இது குறித்து, மின்வாரிய அலுவலர்கள் ஊராட்சி நிர்வாகம் ஆகியோரிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் மின்வயர்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர். மேலும், அந்தப் பகுதியில் இருசக்கர மற்றும் கனரக வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. குழந்தைகள் பெரியவர்கள் கவனக்குறைவாக இருந்தால் விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, மாதாந்திர பராமரிப்பு பணியின்போது இந்தப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்வயர்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.