திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது அண்ணன் முக. அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்த நிகழ்வு திமுகவின் அரசியலில் முக்கிய மாற்றத்தைத் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்த அழகிரி சமீபத்தில் தனது மகன் தயாநிதியின் உடல்நலக்குறைவுக்குப் பிறகு ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த விரிசல்களில் மாற்றம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அழகிரி தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு ஸ்டாலினை தனது டி.வி.எஸ். நகரில் உள்ள இல்லத்திற்கு வருமாறு அழைத்தார். முதல்வரும் அதற்கு ஒப்புதல் அளித்தார். மதுரை வந்திருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் ரோட் ஷோ நிகழ்ச்சி மற்றும் மேயர் முத்து சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு அமைச்சர்கள் யாரையும் அழைத்துச் செல்லாமல் நேரடியாக தனது அண்ணன் அழகிரியின் வீட்டிற்கு சென்றார். இருவரும் தனிப்பட்ட முறையில் உரையாடிய பின்னர் குடும்ப உறவினராக இரவு உணவு பகிர்ந்தனர்.