மதுரையில் வீ. கே. குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடையவரும் பிரபல ரௌடி வெள்ளைக்காளியின் கூட்டாளியுமான மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவரை நேற்றிரவு காவல்துறையினர் என்கவுண்டர் செய்ததில் உயிரிழந்தார்.
இதனையடுத்து உயிரிழந்த சுபாஷ் சந்திர போஸின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உடற்கூராய்வு நடைபெறும் பிணவறை பகுதிக்கு மற்ற உடல்களை பார்க்க வருகை தரும் பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரையும் பலத்த சோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டனர். பிணவறை பகுதியில் உள்ள இரண்டு வாசல்களும் மூடப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். என்கவுண்டரில் உயிரிழந்த சுபாஷ் சந்திர போஸின் உயிரிழப்பு தொடர்பாக உடலை பார்த்தும், சம்பவ இடத்திற்கு சென்றும் மேஜிஸ்திரேட் விசாரணை நடத்தவுள்ளார்.
என்கவுண்டர் செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் மீது தி வி. கே. குருசாமி தரப்பைச் சேர்ந்த முனியசாமியை கொலை செய்வதற்குப் பதிலாக ஆள்மாற்றி ரேஷன் கடை முனியசாமியை கொலை செய்தது, தல்லாகுளம் பகுதியில் நடந்த கொலை வழக்கு உள்ளிட்ட கொலை வழக்குகள் மற்றும் கஞ்சா வழக்குகள் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.