மதுரை: சொத்து அபகரிப்பு வழக்கு; நேர்மையான அதிகாரி நியமிக்க உத்தரவு

82பார்த்தது
மதுரை: சொத்து அபகரிப்பு வழக்கு; நேர்மையான அதிகாரி நியமிக்க உத்தரவு
மலேசியாவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு, மதுரை பொன்னேனி பகுதியில் 32 செந்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை அவர், எஸ். எஸ். காலனியைச் சேர்ந்த நண்பர் தியாகராஜனுக்கு 'பவர்' அளித்து இருந்தார். இதைப் பயன்படுத்தி மோகன்ராஜுக்கு தெரியாமல் தியாகராஜனும், அதே பகுதியைச் சேர்ந்த மனை வணிகர் ஜெயகுமார், இவரது மனைவி அனிதா ஆகியோர் போலியான வாழ்வுரிமைச் சான்றிதழ் தயாரித்து அபகரித்தனர். 

இந்த நிலையில், இந்தத் தம்பதி முன் பிணை வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் மனுதாரர்கள், போலி வாழ்வுரிமைச் சான்றிதழ் தயாரித்து, போலியாக 'சீல்' வைத்துள்ளனர். மனுதாரர்கள், நீதிமன்ற உத்தரவுகளை தவறாகப் பயன்படுத்தி, மோகன்ராஜின் சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என மதுரை மண்டல 4-ஆவது இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிந்தனர். 

இது மட்டுமன்றி, அவர்கள் பல்வேறு சொத்துகளை இதேபோல் போலி ஆவணங்களை பயன்படுத்தி பத்திரப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெறவில்லை என இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே மனுதாரர்களின் முன் பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கை முறையாக விசாரணை செய்வதற்கு நேர்மையான போலீஸ் அதிகாரியை மதுரை மாநகர போலீஸ் ஆணையர் நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி