மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மதுரை மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றின் சார்பில் மதுரை விரகனூர் சுற்றுச்சாலை முதல் விளாங்குடி வரை சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு வைகையாற்றின் இரு கரைகளிலும் ரூ.384 கோடியில் அணுகுச்சாலைகள் அமைக்கப்பட்டன. இதேபோல், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் மதுரை நகருக்குள் வராமல், வைகையாற்றின் கரையோரம் உள்ள அணுகுச்சாலைகள் வழியாக திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல முடியும். மதுரை மாநகர் வைகையாற்றின் வடகரையில் அமைக்கப்பட்ட அணுகுச்சாலைகள் வழியாகச் சென்று விரகனூர் சுற்றுச்சாலையை அடைந்து, அங்கிருந்துதான் மற்ற மாவட்டங்களுக்குச் செல்கின்றன.
இதேபோன்று, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் விரகனூர் சுற்றுச்சாலையிலிருந்து வைகையாற்றின் கரையோரங்களில் அமைக்கப்பட்ட அணுகுச்சாலைகள் வழியாக திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்கின்றன. இதனிடையே, மதுரை மாநகர் அணுகுச்சாலைகள் வழியாகச் செல்லும் வாகனங்கள் விரகனூரிலிருந்து கருப்பாயூரணி, கல்மேடு, சக்குடி வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லும் வகையில் வைகையாற்றின் வடகரையில் சுமார் 8.4 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக அனுமதி கோரி, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.