மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜஹாங்கீர் பாதுஷா தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் கடந்த மார்ச் 2022 நிலவரப்படி, ரயில் நடைமேடை இடைவெளியில் சிக்கி சுமார் 41,596 பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ரயில்வே பாதுகாப்பு ஆணைய அறிக்கையின்படி, 39,015 பயணிகள் இந்த விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, மெட்ரோ ரயில் நிலையங்களைப் போல் அனைத்து ரயில் நிலைய நடைமேடைகளின் இடைவெளியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நடைமேடை இடைவெளியில் சிக்கி உயிரிழந்த பல்லாயிரம் பயணிகளின் நிலை குறித்து வருத்தம் தெரிவித்து, இந்த நடவடிக்கையை ரயில்வே நிர்வாகத்தின் கொள்கை முடிவாக ஏற்க முடியாது என்றனர். மேலும், இந்த வழக்கில் இந்திய ரயில்வே வாரியத்தை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராகச் சேர்த்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.