மதுரை திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ உதயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பேரையூர் பகுதியில் தொடர் மழை பெய்தும் இப்பகுதி கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நீர்வரத்து கால்வாய்கள் பராமரிப்பு இல்லாததே கண்மாய்களில் நீர் தேக்கவைக்க முடியவில்லை. தொடர்ந்து கோரிக்கை வைத்தும் ஊர்களையொட்டி அமைந்துள்ள கண்மாய்கள் தூர்வாரப்படாததால் குப்பைதொட்டியாகவும், கழிவுநீர் தேங்கும் மையமாகவும் மாறியுள்ளது. வரத்துக்கால்வாய்கள் பலவும் ஆக்கிரமிப்பால் குறுகிவிட்ட காரணத்தினால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயிகள் நெல், காய்கறிகள், மக்காச்சோளம் ஆகியவற்றைப் பயிரிட்டாலும், கண்மாய் தண்ணீர் இருந்தால்தான் பயிரிடப்பட்ட நிலங்களில் முழுமையாக மகசூல் பெற முடியும்.
ஆகவே விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதியில் மழைநீரை கண்மாய்களில் தேவையான அளவு தேக்கிவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆட்சியர் இந்த வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும் மழைநீரை முழுமையாக சேமித்து வைக்க இப்பகுதியில் உள்ள கண்மாய்களை உடனடியாக தூர்வாரிடவும், தண்ணீர் தேக்கிவைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறார்.