மதுரை மாவட்டம் திருமங்கலம் அண்ணா நகர் 6வது தெருவில் வசிக்கும் மகாலிங்கத்தின் மகன் சதீஷ்குமார் (35) இவரது மனைவி வெண்ணிலா ஆகியோருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சதீஷ்குமார் கப்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டைலராக பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் இவருடைய மனைவி ஐயன் செய்யும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் இவர்களுக்கு 10 லட்சம் வரை கடன் இருந்துள்ளது. கடனை அடைக்க முடியாமல் திணறி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சதீஷ்குமார் எலி பேஸ்டை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மனவிரக்தியுடன் குழப்பத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (மார்ச் 12) மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்த தென்னை மரத்திற்கு வைக்கப்படும் மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளிக்க திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச் 13) இரவு உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.