மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு சிவன்காளை கோவில் தெருவில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து பட்டாசு விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்று (ஜூன் 3) உசிலம்பட்டி டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், சிவன்காளைத்தேவர் தெருவில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வில், பாண்டீஸ்வரி என்பவரது வீட்டில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்த போலீசார் சுமார் 8 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். போலீசார் பாண்டீஸ்வரியிடம் நடத்திய விசாரணையில், பெட்டிக்கடை வைத்து நடத்தி வருவதாகவும், சட்டவிரோதமான விற்பனை செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குடியிருப்புகள் அதிகம் உள்ள இந்த வீட்டில் அசம்பாவிதம் ஏதும் நடந்திருந்தால், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என பொதுமக்கள் அச்சத்தில் பீதியடைந்துள்ளனர்.