மதுரை மாவட்டம் செங்கானூரணி அருகே நாகமலை அடிவாரத்தில் உள்ள பன்னியான் கிராமத்தில் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. இந்த கிராமத்தில் தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் போன்ற விவசாயம் அதிகம் விளையும் பகுதியாகும். இந்த பகுதியில் தற்போது 200 ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் அதிக மகசூல் காரணமாகவும் போதிய விலை இல்லாத நிலை காரணமாகவும் வயல்களிலே தக்காளிகளை அழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தக்காளி பயிரிட்டுள்ள நிலத்திற்குள் கால்நடைகளை மேய விட்டு தக்காளி செடிகளை அழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி வெறும் 40 ரூபாய்க்கு விலை போவதால் மிகுந்த நஷ்டம் என கூறுகின்றனர். ஏக்கருக்கு 70,000 முதல் 80,000 செலவு செய்திருந்த நிலையில் 5 ஏக்கர் தக்காளி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் தங்களுக்கு மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி எடுப்பதற்கு 80 ரூபாய் செலவு செய்யும் நிலையில் ஒரு பெட்டியின் விலை வெறும் ரூ. 40-க்கு விற்பதால் தக்காளி விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகுந்த கேள்விக்குறியாகி உள்ளது என தெரிவித்தனர். ஆகையால் அதிகாரிகள் தக்காளி பயிர்களை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.