பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் வட்டத் தலைவர் கே. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், அரசு கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் போன்ற சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் 3.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை இளைஞர்களுக்கு காலமுறை ஊதிய முறையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.