நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலில் மூலவர் சன்னதிக்கு முன்புறம் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கொடி மரம் இருந்தது. இதில் தான் விழா காலங்களில் கொடி ஏற்றி வைத்து விழாவை தொடங்குவது வழக்கம்.
இந்த கொடிமரம் பழுதானதால் புதிதாக வேறு கொடிமரம் அமைக்க கோவில் நிர்வாகம் மூலம் முடிவு செய்யப்பட்டு 36 அடி உயரத்தில் புதிய கொடிமரம் உருவாக்கப்பட்டது. இதை பிரதிஷ்டை செய்யும் விழா திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலில் இன்று நடைபெற்றது. அப்போது கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். அதனை தொடர்ந்து திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சாமிகள் தலைமையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சுவாமிகள், கோவில் பொருளாளர் பரமானந்தம், ஆய்வாளர் சதீஷ், நாகை மண்டல சபதி இளையராஜா, உபயதாரர் ராமசாமி ஐயர் குடும்பத்தினர், கோவில் கணக்கர் செல்வம் மற்றும் திரளான பக்தர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருப்புகலூரில் உள்ள மகா காளியம்மன், மாரியம்மன், ஞான விநாயகர், சித்தர் கோவில்களில் பாலாலயம் செய்யப்பட்டது.