நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு மீன் விரலிகள் வழங்கும் திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், தகவல் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன் வளர்ப்பினை ஊக்குவித்திடவும், மீன் உற்பத்தியினை பெருக்கிடவும் அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரித்திடவும், மீன்வளர்ப்போரை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு மீன்விரலிகள் வழங்கும் திட்டத்தில் ஒரு ஹெக்டேர் பரப்பிற்கு 10000 எண்ணிக்கை மீன்விரலிகள் இருப்பு செய்திட ரூ. 5,000/- பின்னிலை மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 60 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி திட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும். எனவே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் நன்னீர் மீன் வளர்ப்பு விவசாயிகள், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.