நாகை: மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்

65பார்த்தது
வலிவலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்: மதகடி வாய்க்காலில் பின் தலையில் ரத்தக் காயத்துடன் கிடந்த சடலத்தை மீட்ட வலிவலம் போலீசார் தீவிர விசாரணை. நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் வெள்ளாற்று பாலத்திற்கு அருகில் சுமார் 15 அடி ஆழமுள்ள மதகடி வாய்க்காலில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வலிவலம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் வலிவலம் பண்டாரவாடை தெருவைச் சேர்ந்த ரமேஷ்குமார் (35) என்பது தெரியவந்தது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட உறவினர்கள், இவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கதறி அழுதது சம்பவத்தைக் காண்போரை கண்கலங்க வைத்தது. உயிரிழந்த இளைஞர் திருமணமாகாதவர் என்பதும் குடிபோதைக்கு அடிமையானவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அவரது பின்தலையில் ரத்தக்காயமும் கண்புருவத்தில் மீன் கடித்த சிறிய காயங்களும் உள்ள நிலையில் அவரது உடலை மீட்ட போலீசார் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வாய்க்கால் மதகுகட்டையில் சுமார் 15 அடி ஆழத்தில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என வலிவலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி