மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அல்லாதோர் போலி ஆவணங்களுடன் நெல் விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகள், பருவகால பணியாளர்கள் மற்றும் கொள்முதல் அலுவலர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் மற்றும் கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதுவரை 184 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 11,254 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் 1,400 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.