நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு அருகே உள்ள அவரிக்காடு ஊராட்சியில், 100 ஆண்டுகள் பழமையான பத்ரகாளியம்மன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கோயில் பூட்டப்பட்டிருப்பதால், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமலும், நேர்த்திக்கடன் செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனால் கோயில் பாழடைந்து வருவதாகவும், அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படாததால் ஊருக்கு தீங்கு ஏற்படுமோ என்றும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக கோயிலை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.