நாகபட்டினம் இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பவணந்தி தலைமை தாங்கி, 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கி வாழ்த்தினார். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் சமத்துவம் என்பதை வலியுறுத்தி, தமிழக அரசின் சார்பில் இந்த விழா நடத்தப்படுவதாகவும், இதன் மூலம் கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க தேவையான சுகாதார முறைகள், ஊட்டச்சத்து உணவு, மருத்துவ பரிசோதனைகளின் அவசியம் குறித்து தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித்குமார், தாய் சேய் நல மருத்துவ அலுவலர் சியமளாதேவி மற்றும் பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.