நாகப்பட்டினம் மாவட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் வாரியத்தின் உறுப்பினர்களாக சேர்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது.
12.06.2025 அன்று காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரையில் வேதாரண்யம், தலைஞாயிறு மற்றும் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், மற்றும் 13.06.2025 அன்று காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரையில் நாகப்பட்டினம், கீழ்வேளுர் மற்றும் திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதால், அந்தந்த வட்டாரங்களில் உள்ள பயனாளிகள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.