நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், கூடுதல் விரைவு ரயில்கள் மற்றும் புதிய வழித்தடத்தில் ரயில்களை இயக்கக் கோரியும் கடந்த 17ஆம் தேதி வர்த்தக சங்கம் சார்பில் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜிடம், திருச்சி கோட்ட மேலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நாகை, காரைக்கால் மாவட்டங்களை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, திருச்சி கோட்ட மேலாளர் பாலக் ராம் நெகி, நாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்து, பொதுமக்களுக்கான வசதிகள், பாதுகாப்பான ரயில் இயக்கம், சரக்கு ரயில் ஏற்றும் பணி, ரயில்வே கட்டுப்பாட்டு அறை, உணவகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் வேளாங்கண்ணி சென்று, காரைக்கால் மற்றும் பேரளம் ரயில் நிலையங்களையும் ஆய்வு செய்தார்.