மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ராமயன் என்பவருக்குச் சொந்தமான படகில் கடந்த 8ஆம் தேதி 14 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் வானகிரியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கடலூரைச் சேர்ந்தவர், மற்றொருவர் தரங்கம்பாடியைச் சேர்ந்தவர். இது குறித்து மின்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளதாகவும், சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மீனவர்களை மீட்டு படகுகளைத் திரும்பப் பெற்றுத்தர வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.