மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் ரோடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் அபிநாத் (20). இவருக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு தனது தந்தையுடன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த சிறுமி, தன்னை அபிநாத் நவ. 25-ஆம் தேதி கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக புகார் அளித்தார். மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுகந்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சிறுமியை மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு முன்னிலைப்படுத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில், அபிநாத் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் அபிநாத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. ஸ்டாலின் விடுத்த செய்திக்குறிப்பில், சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும், வழக்கு விசாரணை காலங்களில் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.