நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. ஆகாஷ், தலைமையில் நடைபெற்றது. வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 295 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 04 நபர்களுக்கு தலா ரூ.14,000/- வீதம் ரூ.56,000/- மதிப்பீட்டில் திறன் பேசியையும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.15,570/- மதிப்பீட்டில் சக்கர நாற்காலியும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.898/- மதிப்பீட்டில் தோள்பட்டை தாங்கியும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.550/- மதிப்பீட்டில் முழங்கை தாங்கி என மொத்தம் 07 பயனாளிகளுக்கு ரூ.73,018/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. வ. பவணந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு. கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.