நாமக்கல்: சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, நாமக்கல்லில் அக்கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசு மதுபான விற்பனையில் ரூ. 1000 கோடி ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
இதையடுத்து, அரசு மதுபான (டாஸ்மாக்) நிறுவனம் முன் பாஜக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையையும் போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் கே. மனோகரன் தலைமை வகித்தார்.
அண்ணாமலையை விடுவிக்கக் கோரியும், திமுக அரசுக்கு எதிராகவும் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மூன்று பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.