கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இயற்கை பானங்களைப் பருக வேண்டும், தளர்வான ஆடைகளை அணிய வேண்டும் என அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டைப் போல, நிகழாண்டிலும் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெயிலின் கொடுமை உச்சத்தைத் தொடலாம். தற்போதே பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 102, 104 டிகிரியாகக் காணப்படுவதால் வெப்பம் மக்களை வாட்டி வருகிறது.
இந்தக் காலக்கட்டங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக நாமக்கல் அரசு மருத்துவர்கள் கூறியதாவது: கோடை வெயிலின் வெப்பக் கதிர்வீச்சு மனிதனுக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். தற்போது 102 டிகிரி வெயில் கொளுத்துகிறது. வானம் மந்தமாகக் காணப்பட்டாலும் புழுக்கத்தின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.