நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், ஊஞ்சபாளையத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (26). லாரி ஓட்டுநரான இவர், மத்தியபிரதேசத்துக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை காலை நாமக்கல்-கரூர் சாலை வழியாக வந்துகொண்டிருந்தார். நல்லிபாளையம் பிரிவு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்தின்பேரில் அந்த லாரியை நிறுத்தி விசாரித்தனர்.
லாரி ஓட்டுநர் போலீசாரைக் கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். அவரை துரத்திச்சென்று போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர் மத்தியபிரதேசத்தில் ரூ. 3,000 கொடுத்து 440 கிராம் கஞ்சா வாங்கிவந்ததாகவும், அதை நாமக்கல் பகுதியில் விற்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து நல்லிபாளையம் போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்தனர். நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம்-1 இல் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஜூன் 20 வரையில் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.