தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ. ராமஜெயம் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் டி. கே. ராஜா, பொருளாளர் எஸ். நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், பொதுக்குழு தீர்மானங்களையும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். முனுசாமி பேசினார். இதில், சவரத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞர் கைவினைத் திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கலைஞர் கைவினைத் திட்டத்தின் பயனாளிகளுக்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும். வங்கிகளில் கடன் பெறுவதற்கான நெருக்கடிகளைக் களையவேண்டும் என்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். விவசாயம், விசைத்தறி தொழிலுக்கு உள்ளதுபோல், முடிதிருத்தகங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் இத்தொழில் செய்யும் சமூக மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.